dinsdag 26 april 2011

கருத்தொற்றுமை!!

அரசியலனுபவமில்லாவிடினும் இன்றைய சூழ்நிலை பற்றி நான் கூறிவந்த கருத்துக்களும் அரசியல் பழத்தின் கருத்துக்களும் ஒத்தவையாக உள்ளன!!இந்தியாவின் திணிப்பை ஏற்க முடியாவிடினும் கற்ற அனுபவத்தினால் அறிந்த உண்மை இந்தியாதான் நமக்கிருக்கும் ஒரு உதவிக்கரம் என்பது,அதை வெட்டி நம்மை இழப்புக்குள் தள்ளிய அமெரிக்க ஆதரவுகளாலேயே அன்றும் இன்றும் தமிழர் அழிந்தனர்,அழிகின்றனர்.நமது தவறுகளை அடையாளம் காணாமல் இந்தியாவை எதிர்த்து கோசமிடுவதால் ஆகப்போவது எதுவுமில்லை.உண்மைகள் உறங்கா!!எனவே உண்மையாக இருப்போம்.உணர்ந்து நடப்போம்!!
சில வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதில் தவறி இருக்கிறோம், என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்: இரா.சம்பந்தன்
அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான யதீந்திரா கடந்த 11.04.2011 அன்று அவரது இல்லத்தில் வைத்து இந்நேர்காணலைச் செய்திருந்தார். சுகவீனம் காரணமாக சிறிது காலம் இந்தியாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த இரா.சம்பந்தன், மீண்டும் உற்சாகமாக அசியல் பணிகளை ஏற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டிருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் [TNA] தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்.

கேள்வி: சமகால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து குறிப்பாக 2009 மே 19ம் நாளுக்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் புதிய நிலைமைகளில், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி எவ்வாறான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றீர்கள்…?

சம்பந்தன்: 2009 வைகாசி மாதம், நீண்டகாலமாக நடபெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் முடிவுக்கு வரும் வரையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தமிழரின் உரிமைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்களிப்பை வழங்கி வந்திருக்கின்றனர். அவர்கள், இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் தங்களுடன்தான் பேசி தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண வேண்டுமென்னும் கருத்தைக் கொண்டிருந்தனர். நாங்களும் அதற்கு மாறுபட்ட ஒரு கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதேவேளை நாங்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் எங்களது கருமங்களை தொடரவும் தவறவில்லை.

யுத்தம் ஓய்ந்த பின்னர், அந்தப் பணிகளை புதிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எமக்கிருந்தது. இதன் பொருட்டு நாங்கள் சில முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாக இருந்தோம்.

விசேடமாக, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மறைவு அல்லது அழிவின் நிமித்தமாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. எங்களது மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை, எனவே அரசியல் ரீதியான ஒரு தீர்வைக் காணும் எமது பயணமும் முற்றுப்பெறவில்லை என்ற உண்மையின் அடிப்படையில், நாங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருந்தோம். அவ்வாறானதொரு அரசியல் தீர்வைக் கண்டடைவதற்காக நாம் அரசுடன் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியையும் நாம் வெளிப்படுத்தினோம்.

இலங்கை அரசாங்கத்தை, எங்களுடன் பேசுவதற்கு நிர்ப்பந்திக்கும் நோக்கில் சர்வதேச சமுகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தினோம். குறிப்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் எமது பிரச்சனைகள் குறித்துக் கலந்துரையாடினோம். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மற்றும் உயர்மட்ட இந்தியத் தரப்பினர் பலருக்கும் நிலைமைகளை தெளிவுபடுத்தினோம்.

இவ்வாறான முயற்சிகளுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பொழுது, இரண்டு பிரதான வேட்பாளர்களுடன் எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். நான் திருவாளர் மகிந்த ராஜபக்சவுடன் முன்று தடைவைகள், பல மணித்தியாலங்களாகப் பேசினேன். இதே போன்று, சரத் பொன்சேகாவுடனும் பல தடைவைகள் பேசினேன் - எமது மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பில் ஒரு அரசியல் தீர்வைக் காணும் நோக்கில், எவரை ஆதரிப்பது பொருத்தமாக அமையும் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே நாம் இவ்வாறான சந்திப்புக்களில் ஈடுபட்டோம்.

மேற்படி சந்திப்புக்களின் போது எமக்குக் கிடைக்கப்பெற்ற விளக்கங்களின் அடிப்படையிலேயே நாம் இறுதி முடிவையும் எடுக்க நேர்ந்தது. ஆனால் நாம் இவ்வாறான சந்திப்புக்களின் போது ஒரு விடயத்தை இரு வேட்பாளர்களுக்கும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்று நாடாளுமன்றம் சென்றால், எவர் ஜனாதிபதியாக இருப்பினும் அவருடன் பேசி, எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம், என்ற தகவலையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

எதிர்பார்த்தது போன்று நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வடகிழக்கில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்று, நாடாளுமன்றம் சென்றோம். ஏனைய எந்தவொரு கட்சியும் குறிப்பாக தமிழ் கட்சிகள் எவையும் எமது மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. மக்கள் எமது அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதன் விளைவே அவர்கள் எம்முடன் கைகோர்த்திருக்கக் காரணம்.

நாம் வெற்றி பெற்றதும் முன்னர் குறிப்பிட்டவாறு எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கானும் நோக்கில், வெற்றி பெற்ற அரசுடன் பேசி வருகின்றோம். சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

யுத்தத்தின் மூலமான விளைவுகளை நாம் அறிவோம் எனவே அது குறித்து நான் பேச வேண்டிய அவசியமில்லை. இந்த அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டுதான் நாங்கள் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் சில நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். எமது முயற்சிகளுக்கு பின்னால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை எமக்குண்டு. குறிப்பாக இந்தியாவின் ஆதரவும் எமக்கு பின்னால் இருக்கிறது.

சில காரணங்களின் நிமித்தமாக இலங்கை அரசும் ஒரு அரசியல் தீர்வு நோக்கி வர வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படலாம். அது அவர்களவில் ஒரு கட்டாயாயத் தேவையாகக் கூட அமையலாம். எனவே நாட்டில் அமைதி நிலவ வேண்டுமாயின், நாட்டில் புனரமைப்பு இடம்பெற வேண்டுமாக இருந்தால், நிட்சயமாக ஒரு அரசியல் தீர்வு அடிப்படையான தேவையாக இருக்கும். நாங்களும் எமது மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நிதானமாக முன்னேற வேண்டியவர்களாக இருக்கிறோம். இதன் பொருட்டு குறிப்பிட்ட இந்தக் காலத்தில் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறோம். தொடர்ந்தும் முயல்வோம்.

கேள்வி: ஈழத் தமிழர்களின் கடந்த அறுபது ஆண்டுகால அரசியலை எடுத்து நோக்கினால், மிதவாத வழியில் தொடங்கிய உரிமைப் போராட்டம் பின்னர் ஆயுதவழி அரசியலை நோக்கி வளர்ந்து சென்று, மீண்டும் மிதவாத வழிக்கே திரும்பியிருக்கிறது. ஆனால் அரசியல் அடைவு [Political Achivement] என்று பார்த்தால், நம்மால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறு எதனையுமே அடைந்திருக்க முடியவில்லை… இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.. இந்த காலங்களின் சாட்சியாக இருப்பவர் என்ற வகையில், உங்கள் அவதானத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா?

சம்பந்தன்: இது ஒரு முக்கியமான கேள்வி. நீங்கள் குறிப்பிட்டதில் உண்மை இருக்கிறது. இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஏற்பட்ட இனத்துவப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காணும் நோக்கில், தந்தை செல்வநாயகம் அவர்கள் இலங்கையின் இரண்டு முக்கிய தலைவர்களுடனும், குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கும் மதிப்பும் மிக்க தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் - இதன் விளைவாக 1957ம் மற்றும் 1965ம் ஆண்களில் இரு முக்கியமான உடன்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இவ் உடன்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நாம் எமது பிரச்சனைக்கான தீர்வைக் கண்டிருப்போம். ஆனால் இலங்கை அரசு எதனையும் நிறைவேற்ற வில்லை. இதன் விளைவாக எமது முயற்சிகளில் எம்மால் வெற்றி பெற முடியாமல் போனது. இறுதியில் எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் வன்முறை வெடித்தது.

ஆனால் நாங்களும் சில வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதில் தவறி இருக்கிறோம், என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஜே.ஆர்.ஜயவர்த்தன 1977 ம் ஆண்டு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது பிரச்சனையை நிறைவேற்றுவது தொடர்பில் சில விடயங்களை குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் கூறியது போன்று ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுத்திருக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, நாங்கள் அவரது ஆட்சிக்கு மாறாக ஒரு பாரிய சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இதில் நானும் ஒரு குற்றவாளிதான். நானும் அப்போது நாடாளுமன்றத்தில் இருந்தேன். நாங்கள் அத்தகையதொரு போராட்டத்தை ஆரம்பித்திருந்தால் வன்முறையை தடுத்திருக்கலாம். வன்முறை வெடித்திருக்காது.

வன்முறை வெடித்த பின்னரும் கூட எங்களுக்கு சில சந்தர்ப்பங்கள் கிடைக்காமலில்லை. நாம் இந்தப் பிரச்சனையை ஆக்க பூர்வமாகத் தீர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் துரதிஸ்டவசமாக அவ்விதம் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை. நாங்கள் இது குறித்து பல நடவடிக்கைளை எடுத்திருந்தோம் ஆனால் எதுவும் கை கூடவில்லை. சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்தில் ஒரு பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு எமது போராளிகள் ஒத்து வந்திருந்தால் ஒரு நியாயமான தீர்வைக் கண்டிருக்கலாம். 2002 ம் ஆண்டு ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் பிரச்சனையை தீர்ப்பதற்காக நாங்கள் ஆக்க பூர்வமாக செயற்பட்டிருந்தால், ஒரு முடிவை கண்டிருக்கலாம் அனால் அதுவும் கைகூட வில்லை.

இதனால் எமது கடந்த கால செயற்பாடுகளால் எதுவுமே நிகழவில்லை என்றும் கருதக் கூடாது. நீங்கள் குறிப்பிடுவது போன்று ஒரு ‘அரசியல் சாசன’ ரீதியாக எங்களால் எதனையும் பெற முடியவில்லை என்பது உண்மையே, ஆனால் இன்று தமிழ் மக்களின் பிரச்சனை சர்வதேசமெங்கும் அறியப்பட்ட ஒரு விடயமாக மாறியிருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை முழு உலகும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இனி எவராலும் தமிழ் மக்களின் பிரச்சனையை புதைத்துவிட முடியாது. இவ்வாறானதொரு நிலைமை, எமது கடந்த கால முயற்சிகளின் விளைவாக ஏற்பட்ட ஒரு சாதகமான விடயம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி: நீங்கள் இந்தியா பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவற்ற ஒன்றாகவே இருக்கிறது. பிரிவினை வாதத்தை ஏற்றுக் கொள்ளாத இந்தியா தமிழ் ஈழப் பிரகடணத்தை முன்வைத்த வரதராஜப் பெருமாளுக்கும் அடைக்கலம் கொடுத்தது. இன்றும் சோனியா காந்தி ஈழத் தமிழர் பிரச்சனையில் தமக்கு அக்கறை இருப்பதாகக் கூறுகின்றார். மறுபக்கத்தில் எமது சூழலில் இந்தியா பற்றி அதிகம் எதிர்நிலையான கருத்துக்களே இருக்கின்றன. இதன் உண்மை நிலை என்ன? புலிகள் முற்றிலும் அழிந்துபோன சூழலில் ஈழத் தமிழர் விவாகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது?

சம்பந்தன்: இந்தியா குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூற முடியும். அது அவர்களின் பார்வை. ஆனால் எமது பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த முதல் நாடும், ஒரேயொரு நாடும் இந்தியா மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எமது பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டுமென்பதற்காக தங்களது உதவியை தருவதற்கு தாம் தயார் என்பதை பகிரங்கமாகக் கூறிய நாடும் இந்தியாதான். அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி, தமது நிலைப்பாட்டை இலங்கை அரசை ஏற்கும்படியான சூழலையும் ஏற்படுத்தியிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

1987 ஆடி 29ல் நிறைவேற்றப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் சில அடிப்படையான விடயங்கள் குறித்து, இலங்கை அரசாங்கம் உண்மை நிலையை ஏற்றுக் கொண்டது. இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள் முஸ்லிம்கள் எனப் பல இனங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவே அவர்களுக்கென்றதொரு தனித்துவம் இருக்கின்றது. ஒரு தனிப்பட்ட கலாசாரம் இருக்கின்றது. எனவே அதனைப் பேணிப் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு என்ற உண்மையை அரசு ஏற்றுக் கொண்டது. இதற்கு முன்னர் இலங்கை அரசு, இத்தகையதொரு நிலைப்பாட்டை ஒருபோதுமே ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

விசேடமாக 1972, 1978ல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனங்களின் ஊடாக, இந்த நிலைப்பாட்டை அவர்கள் உதாசீனம் செய்திருந்தார்கள். வடகிழக்கில் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள், எனவே அந்தப் பிரதேசங்கள் ஓர் அலகாக கொள்ளப்பட்டு அவர்களுக்கென்றொரு ஆட்சியதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. முக்கியமாக தமிழ் மக்கள் ஆட்சியதிகாரத்திற்கு உரித்துடையவர்கள் என்னும் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அதிகாரப்பகிர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஒரு சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அதனை உறுதி செய்து கொள்வதற்கான அதிகாரமும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது, ஆனால் அதனை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டும் இருந்தது. மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வரும்வரை சர்வசன வாக்கெடுப்பு நடைபெற முடியாது என்ற நிலைப்பாடும் இருந்தது. இப்படி பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஆனால் இது முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் நாங்கள் இவ்வாறானதொரு நிலையில் இருந்திருக்க மாட்டோம். இதனைக் காட்டிலும் ஒரு உறுதியான நிலையில் இருந்திருப்போம். இந்திய அமைதிப் படைகள் இங்கு வந்த போது குறிப்பாக திருகோணமலையில் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கொடுத்திருந்தனர் என்பதையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால் துரதிஸ்டவசமாக எமது போராளிகளுக்கும் இந்திய அமைதிப் படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அது ஏற்பட்டிருக்கக் கூடாது. இதனால் எமது போராளிகளுக்கும் இழப்பு. இந்திய அமைதிப் படைக்கும் இழப்பு. இறுதியில் எமது போராளிகள் பிரேமதாச அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதன் விளைவாக, இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் தொடர்சியாக அதுவரை பங்காளியாக இருந்த இந்தியா பார்வையாளர் நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர் ராஜீவ் காந்தியின் கொலை இடம்பெற்றது. இப்படிப் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று பலரது கருத்து இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பது. இப்படியான விடயங்கள் பலரும் அறிந்த ஒன்றும் கூட.

ஆனால் நாங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கும் தனது சொந்த நலனில் அக்கறை உண்டு. எந்தவொரு நாட்டிற்கும் அதன் தலைவர்களுக்கும் தங்கள் சொந்த நாட்டினது நலன்களில் அக்கறை இல்லாமல் இருக்க முடியாது. தங்களது சொந்த நாட்டின் நலன்களை உதாசீனம் செய்து எங்களுக்காக அவர்களெல்லாம் உதவ முன்வருவார்கள் என்று நாங்களும் கருதக் கூடாது. நாங்கள் இயன்றளவிற்கு அவர்களது தேவைகளை விளங்கிக் கொண்டு அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் அவர்கள் செயற்படும் போது, அதனோடு சேர்ந்து எங்களது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் நாங்கள் செயலாற்ற வேண்டும்.

நான் விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்தியா நடந்து கொண்ட விதம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. இந்தியாவைப் பொருத்தவரையில் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு மாறாக இருந்தவர்கள் என்பதையும் நாங்கள் எவரும் மறுக்க முடியாது. அதே போன்று விடுதலைப்புலிகளும் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தவர்கள் என்றும் எவராலும் கூறவிட முடியாது. ஆனால் இன்று ஒரு புதிய நிலைமை எற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், இன்னும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்பது. எமது மக்களுக்கு இன்னும் ஒரு விமோசனம் கிடைக்கவில்லை. எனவே அதற்கொரு தீர்வைக் காண வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இருக்கின்றது.

இன்று மனித உரிமைகள், போர்க் குற்றங்கள் என்று பேசுகின்றார்கள். இவைகள் எல்லாம் இந்த நாட்டில் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமென்றால், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். அவ்வாறானதொரு தீர்வு எட்டப்பட்டால்தான் இனிமேலும் இந்த நாட்டில் சர்வதேச மனிதாபீமானச் சட்டங்களும் மனித உரிமைச் சட்டங்களும் மீறப்படாத ஒரு நிலைமை ஏற்படும். அது நிகழ வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்குவதன் மூலம் மட்டுமே அதனை அடைய முடியும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேசமும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுதான் இன்றைய நிலைமை.

எங்களைப் பொருத்தவரையில், நாம் பாரதப் பிரதமருக்கும் இந்தியாவின் உயர் மட்டத்தினருக்கும் எங்களது நிலைப்பாட்டை, இன்றைய நிலைமையை ஒளிவுமறைவின்றி தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறோம். நாங்கள் நாட்டைப் பிரிக்கும்படி கேட்கவில்லை. இந்தியாவும் நாட்டைப் பிரிப்பதற்கான எண்ணப்பாட்டில் ஒருபோதும் இருந்திருக்கவில்லை. இந்திரா காந்தியும் அவ்வாறு சிந்தித்திருக்கவில்லை. ராஜீவ் காந்தியும் அவ்விதமாகச் சிந்திக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் பாதுகாப்பு, கௌரவம், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார ரீதியான உரிமைகளை வழங்கும் வகையிலான ஒரு தீர்வை வழங்க வேண்டுமென்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அது ஈடேறவில்லை. ஆகவே நாம் இனிவருங்காலத்திலாவது அதனைப் பெறும் வகையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்பதே எனது கருத்து.

கேள்வி: இந்தியாவுடன் தொடர்ந்து பேசிவருபவர் என்ற வகையில் அது என்னவகையானதொரு தீர்வு குறித்து அக்கறை கொள்கிறது? பலரும் இந்தியா 13வது திருத்தச் சட்டம் குறித்தே கவனம் கொள்ளுவதாச் சொல்லுகின்றனர். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

சம்பந்தன்: எமது மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும், இந்தியா அல்ல. ஆனால் இதில் இந்தியாவின் ஆலோசனைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். தவிர 13வது திருத்தச் சட்டம் குறித்தெல்லாம் இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு தீர்வை காணுவது எங்களுடைய பொறுப்பு. அந்தத் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்களும் நாங்கள்தான். ஆனால் இது குறித்து இந்தியாவின் ஆலோசனையை நாம் பெறுவோம். அதனை நாம் உதாசீனம் செய்ய மாட்டோம்.

ஆனால் நான் நூற்றுக்கு நூறு வீதம் சிறந்ததொரு தீர்வாக அது அமையும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் எங்களுடைய மக்களின் அத்தியாவசியமான தேவைகளான பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, காணி, மருத்துவம், நீர்ப்பாசனம், கல்வி மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள் என்று, பல விடயங்களை உட்கொண்டதொரு தீர்வாக அது இருக்க வேண்டுமென்றே நாங்கள் விரும்புகின்றோம்.

அதாவது பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாடுகளில் நிலவும் அதிகாரப் பகிர்வு முறைமையின் கீழான தீர்வொன்றையே நாம் கோருகின்றோம். உதாரணமாக இந்தியாவின் மாநில ஆட்சி முறைமைக்கு ஒப்பான ஒன்று எனலாம். இன்று அந்த மாநில ஆட்சி முறைமையின் கீழ் பலவிதமான கருமங்கள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் இந்தியாவுடன் பேசி வருகின்றோம். இது தொடர்பில் அரசாங்கத்தை நம்ப முடியாது. அதற்காக எல்லோரையும் சந்தேகத்துடனும் நோக்க முடியாது. இதில் நாங்கள் குழம்பாமல் நிதானமாகப் பயணிக்க வேண்டும். பயணிப்போம்.

கேள்வி: நீங்கள் பல முயற்சிகளை எடுத்து வருவதாக குறிப்பிடுகின்றீர்கள் குறிப்பாக இலங்கைக்குள் ஒரு தீர்வைப் பெறும் வகையில் செயலாற்றி வருகின்றீர்கள் ஆனால் புலம்பெயர் சூழலில் முற்றிலும் மாறுபட்ட வகையிலான செயற்பாடுகள் அரங்கேறிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. உங்களது செயற்பாடுகளுக்கும் அவர்களது செயற்பாடுகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி தொடர்வதாகத் தெரிகிறதே! இது பற்றிய உங்கள் அவதானம் என்ன?

சம்பந்தன்: புலம்பெயர் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் அவர்கள் பலர் என்னோடு தொடர்பிலிருக்கின்றனர். எல்லோரும் கடும் போக்கை எடுக்கவில்லை. நிட்சயமாக இல்லை. கணிசமான மக்கள் எங்களது சமகால முன்னெடுப்புக்கள் சரியானது, நியாயமானது, நிதானமானது, அதனை நீங்கள் தொடர வேண்டும் என்றே கூறி வருகின்றனர்.

இதனால் நாங்கள் மற்றவர்களை மதிக்கவில்லை என்றும் பொருள் அல்ல. ஆனால் சிலர், குறிப்பாக நாடு கடந்த அரசு [Transnational Government �TGTE], உலகத் தமிழர் பேரவை[Global Tamil Forum �GTF] போன்ற அமைப்புக்கள், அரசை நம்ப முடியாது, அவர்கள் இறுதியில் உங்களை ஏமாற்றுவார்கள் என்று குறிப்பிடுகின்றனர். எனவே நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் இருந்து விலக முடியாது என்பதே அவர்களது வாதமாக இருக்கின்றது.

ஆனால் அவ்வாறானவர்களும் கூட எங்களது முயற்சிகளை நிராகரிக்கவில்லை. குறை சொல்லவில்லை. அவர்கள் அவர்களது வழியில் செல்கின்றனர். நாங்களும் எங்களுக்கு சாத்தியமான வழிகளில் செல்கின்றோம். பார்ப்போம் இவைகள் எல்லாம் எங்கு போய் முடியுமென்று.

நான் சகலருடனும் தொடர்பிலேயே இருந்து வருகின்றேன் ஆனால் என்னால் நிட்சயமாகச் சொல்ல முடியும், புலம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் நிதானமான நிரந்தரமான தீர்வு குறிப்பாக, இங்கிருக்கும் மக்கள் வாழ வேண்டும் என்பதில் அவர்கள் மிகுந்த அக்கறையாக இருக்கின்றனர்.

நாங்கள் விரைவில் இந்த நாடுகளுக்குச் செல்ல இருக்கின்றோம். அங்கு மக்களையும் சந்தித்துப் பேசுவதற்கு எண்ணியுள்ளோம் மேலும் எங்களது பேச்சுவார்த்தை முன்னேற்றங்களை அவதானித்து சகல நாடுகளின் அரசியல் சக்திகளுடனும் பேச இருக்கின்றோம். இந்தியாவிலும் மத்திய அரசை மட்டுமல்ல சகல மாநிலங்களிலிலும் பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து, எங்களது பிரச்சனைக்கானதொரு தீர்வைக் கானும் நோக்கில் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி: கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனையோ தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நீலன் திருச்செல்வத்தின் தீர்வாலோசனை அல்லது ஆனந்தசங்கரி முன்வைத்த யோசனை. இப்படி பலவாறான தீர்வு யோசனைகள் ஏலவே இருக்கின்றன. எனவே புதிதாக ஒரு திர்வுத்திட்டத்தை முன்வைப்பதைவிட ஏற்கனவே இருப்பதைக் கொண்டே பேச முடியும். குறிப்பாக நீலனின் அலோசனைக் கூட முன்வைக்க முடியும். சிலரது அபிப்பிராயத்தின் படி குறிப்பாக புலம்பெயர் தேசியவாத அமைப்புக்கள், இலங்கை அரசு பேச்சு வார்த்தை என்ற பேரில் காலத்தை இழுத்தடிக்கும் வகையில் செயற்படுவதாகக் குறிப்பிட்டு வருகின்றனர். அதனை எதிர்கொள்வதற்கான பொறிமுறையற்று நீங்கள் செயலாற்றி வருதாகவும் குறிப்பிடுகின்றனர். இது பற்றி என்ன கருதுகின்றீர்கள்.

சம்பந்தன்: நாங்கள் இப்போது பழைய விடயங்களைப் பேசுவதில் பயனில்லை. நீலன் திருச்செல்வத்தின் தீர்வுத் திட்டத்தில் நானும் கடினமாக உழைத்திருக்கின்றேன். இப்போது அதனையும் உள்ளடக்கித்தான் நாம் பேசி வருகின்றோம்.

அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கின்றது அல்லது ஏமாற்றப் பார்க்கின்றது என்பதற்காக நாங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது. எங்களளவில் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள வேண்டிய கட்டாய நிலைமையில் நாங்கள் இருக்கின்றோம். ஏனென்றால் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் கூட சர்வதேச சமூகத்தைப் பொருத்தவரையில் புலிகளின் சமாதான ஈடுபாடு என்பது உதட்டளவில் இருக்கின்றதேயன்றி அது உண்மையானதல்ல. அவர்கள் தமிழ் ஈழம் என்னும் இலக்கிலேயே ஒன்றித்திருக்கின்றனர் - இதுவே சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயமாக இருந்தது.

இன்று நிலைமை வேறு, அதாவது மக்களுடைய ஜனநாயக ரீதியான அங்கீகாரத்தைப் பெற்ற மிதவாதத் தலைவர்கள், ஒரு அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் விசுவாசத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இதில் நாங்கள் உண்மையாக இருக்க வேண்டும். இங்கு அரசினது போக்கு வேறொன்றாக இருக்கலாம். அது எமக்கும் தெரியும். நாங்கள் ஏமாறாமல் இருந்தால் அவர்களால் எங்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் இழுத்தடிக்க முயற்சிக்கலாம் நாங்கள் அதனை நிறுத்தலாம். அவர்கள் தீர்வு தொடர்பில் ஒரு முடிவுக்கு வராவிட்டால் பின்னர் இழுத்தடிப்பதில் என்ன பயன் இருக்க முடியும்?

எனவே நாங்கள் எதனைச் செய்ய முயல்கின்றோம் என்பதை அறிந்து செயற்பட்டால் அரசின் எண்ணம் எதுவாக இருப்பினும் அது குறித்துக் கவலைப்படாமல், எங்களது இலக்கை அடைவதற்கான அனைத்தையும் நாம் செய்து கொண்டிருக்க முடியும்.

அதில் ஒன்று நாங்கள் விசுவாசமாகப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ள வேண்டும். எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நாங்கள் நாளை இந்தியாவிற்கோ, அமெரிக்காவிற்கோ அல்லது ஜரோப்பிய ஒன்றியத்திற்கோ சொல்லக் கூடியதாக இருக்கும் - இதுதான் நாங்கள் முன்வைத்த தீர்வாலோசனை. இதில் என்ன தவறு இருக்கிறது?

இதனை ஏன் அவர்கள் ஏற்கவில்லை? இது ஏற்கப்படாமல் இருப்பதற்கு யார் பொறுப்பாளி ? இது குறித்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? மறுபடியும் ஒரு வன்செயல் ஊடாக எமது மக்களை அழிக்கப் போகின்றீர்களா? அல்லது ஒரு முடிவைக் காணும் வகையில் செயலாற்றப் போகின்றீர்களா? இப்படியான கேள்விகளை எழுப்பக் கூடிய சாதகமான நிலையில் நாங்கள் இருக்க வேண்டும். எனவே இப்படியான அக புற நிலைமைகளைக் கருத்தில் கொண்டே, நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

புதினப்பலகை' யதீந்திரா.

Geen opmerkingen:

Een reactie posten